தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Wednesday, March 28, 2012

ரூ. 2 ஆயிரம் கட்டணத்தில் எம்பிபிஎஸ்


புகழ்பெற்ற எய்ம்ஸ் கல்வி நிறுவனம் தில்லியில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டில் மேலும் 6  இடங்களில் இந்தக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்குக் கட்டணம் ரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவு.


தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக் கல்வியிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் தலை சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கனவு. நேருவின் முன் முயற்சியால் அன்றைய மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் 1956 ஆம் ஆண்டில் உருவானது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால், புவனேஸ்வரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் புதிதாக அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. இந்த ஏழு கல்வி நிறுவனங்களிலும் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 77 இடங்கள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 11 இடங்களும் பழங்குடி இன மாணவர்களுக்கு 5 இடங்களும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 19 இடங்களும் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன. மத்திய அரசினால் பரிந்துரைக்கப்படும் 5 வெளிநாட்டவர்களுக்கும் இங்கு இடங்கள் அளிக்கப்படும். இந்திய பிரஜைகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. புதிதாகத் தொடங்கப்படும் ஆறு எய்ம்ஸ் நிறுவனங்களில் தலா 50 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 சதவீத இடங்களும் பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடங்களும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு. இங்குள்ள எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படும் மாணவர்கள் ஓராண்டு இன்டர்ன்ஷிப் உள்பட மொத்தம் ஐந்தரை ஆண்டு காலம் படிக்க வேண்டும்.

இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 17 வயதானவர்களாக (டிசம்பர் 31ம் தேதி அன்று) இருக்கவேண்டும். ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து இருக்கவேண்டும். பிளஸ் டூ தேர்வில் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடைசியாக அத்தேர்வை எழுதிய ஆண்டைக் குறிப்பிட வேண்டும். எம்ஸ் கல்வி நிறுவனங்களில் எந்தக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்புகிறோம் என்பதையும் விண்ணப்பத்தில் வரிசைப் படுத்திக் குறிப்பிட வேண்டும்.

அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டீகர், சென்னை, டேராடூன், தில்லி, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜம்மு, ஜோத்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா, ராய்ப்பூர் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்த நுழைவுத் தேர்வு மூன்றரை மணி நேரம் நடைபெறும். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அப்ஜெக்ட்டிவ் முறையில்  கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 60 கேள்விகளும், பொது அறிவுப் பாடத்தில் 20 கேள்விகளும் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது சரியானது என்பதைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. பிளஸ் டூ பாடத்திட்ட நிலையில் வினாக்கள் கேட்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் என எதையும் எய்ம்ஸ் வெளியிடவில்லை. வினாத்தாள்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இருக்கும். எந்த மொழியில் வினாத்தாள் வேண்டும் என்பதை மாணவர்கள் விண்ணப்பத்திலேயே குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்ட பிறகு, அதை மாற்ற முடியாது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஸ் அட்மிஷன் பெற, பொதுப் பிரிவு மாணவர்கள் இந்த தேர்வில் குறைந்தது 50 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஓபிசி பிரிவு மாணவர்கள் குறைந்தது 45 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 40 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று எய்ம்ஸ் நிர்ணயித்துள்ளது.

இந்தக் கல்வி நிறுவனங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமாக ரூ.1628 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சோதனைக்குப் பிறகு தேர்வு செயப்பட்ட மாணவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விடுதிக் கட்டணமாக ரூ.4,228 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாற்றத்துக்கு உட்பட்டது. மத்திய அரசுக் கல்வி நிறுவனம் என்பதால் எம்பிபிஎஸ் படிப்புக்கு இந்த அளவு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வு எழுத ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.800. பாரத ஸ்டே வங்கிகளில் கம்ப்யூட்டர் சலான் மூலம் இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி 2-4-2012
நுழைவுத் தேர்வு 1-6-2012
விவரங்களுக்குwww.aiims.ac.inwww.aiims.edu, www.aiimsexams.org


நன்றி : புதிய தலைமுறை 

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top