தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Wednesday, December 1, 2010

திருச்செந்தூர் ரயிலில் நாசவேலை


திருச்செந்தூர் ரயிலில் நாசவேலை செய்தவர்கள் 

தொழில் நுட்பம் தெரிந்தவர்களே! 

பரபரப்பு தகவல்கள்!!

திருச்செந்தூர் இரயில் மர்ம நபர்கள் நாசவேலையால் என்ஜின் பழுதாகி நெல்லை செல்லாமல் நிறுத்தப்பட்டது. மேலும் நாசவேலையில் என்ஜின் தொழில்நுட்பம் தெரிந்தவர்களே ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.


திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு தினசரி காலை 7.20, மதியம் 2.20, மாலை 4.15 மற்றும் மாலை 6.00 மணிக்கு பயணிகள் இரயிலும், நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு காலை 7.10, காலை 9.35, பகல் 11.15 , 6.15 மணிக்கும், பயணிகள் இரயில் போக்குவரத்து நடக்கிறது. இது போக பிரதி வியாழன் தோறும் இரவு 7.15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்கின்றது.

இன்று காலையில் வழக்கம் போல் திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்கு நெல்லை செல்லும் பயணிகள் இரயில் (எண். 732) புறப்படுவதற்கு தயாராக உள்ளதா என்ற சோதனைக்காக என்ஜின் கேபினுக்குள் லோகோ பைலட் (இரயில் என்ஜின் டிரைவர்) மந்திரம் மற்றும் உதவியாளர் வெள்ளையன் ஆகியோர் முனைந்தனர். அப்போது தான் ரயில் இன்ஜினுடன் இணைந்த ஜெனரேட்டரிலிருந்து வரும் மின்சாரத்தை கட்டுப்டுத்தும் ஏசிசிஆர் என்ற கண்ட்ரோல் கேபிளை யாரோ மர்மநபர்கள் கழற்றிப் போட்டிருப்பது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக லோகோ பைலட்கள் ரயில்வே நிலையம், நிலையத்துடன் இணைந்திருக்கும் ரயில்வே போலீஸ் ஸ்டேசன், மற்றும் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். மேலும் தென்னக ரயில்வே தலைமையகத்திற்கும் அவசர தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில் அங்குள்ள அதிகாரிகள் இரயில் என்ஜினை பழுதுபார்க்க ஆள்வரும் வரை நிறுத்திவைக்குமாறு அதிகாரிகள் ஆணையிட்டனர். 

தகவலின் பேரில் திருநெல்வேலி இரயில்வே கோட்ட காவல் சார்பு ஆய்வாளர் சங்கர், மற்றும் திருச்செந்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் இசக்கி உள்ளிட்டோர் இரயில் என்ஜினை பார்வையிட்டும், கைரேகை நிபுணர்கள் வந்து சோதனையும் செய்தனர். இரயில் நிலையத்திலும தீவிர சோதனை செய்யப்பட்டது.

விசாரணை துவக்கத்திலே மர்ம நபர்கள் இரயில் என்ஜின் கேபினுக்குள் நுழைந்து ஏசிசிஆர் இணைப்பை ஸ்பேனர் கொண்டுதான் கழற்றி உள்ளது தெரியவந்தது. எனவே தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியது. முர்மநபர்கள் நாசவேலை மூலம் இரயில் என்ஜினை பழுது செய்ய முயற்சித்தது இரயிலை நிறுத்தவா அல்லது திருடத்தானா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றது.

எல்லாவற்றையும் விட இரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு முன்பு தான் இந்த இரயில் என்ஜின் நிறுத்தப்பட்டிருந்ததும், பாதுகாப்பு பணியில் இரண்டு போலீசார் ஈடுபட்டிருந்த வேளையில் கூட சம்பவம் நடந்ததுதான் மிக்க வேடிக்கையாக உள்ளது.

தினசரி காலையில் நெல்லை செல்லும் இந்த இரயிலில் திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஸ்ரீவைகுண்டம் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்குச் செல்பவர்கள், அரசு மற்றும் தனியார் பணிக்குச் செல்பவர்கள் என ஒரு கூட்டமே நாள்தோறும் பயணிக்கும்.. திடீரென ஏற்பட்ட இரயில் என்ஜின் பழுதால் இரயிலானது நிறுத்தப்பட்டதால் வழக்கமான பயணிகள் அனைவரும் பெரிதும் ஏமாற்றத்துடன் இரயில்நிலையத்திலிருந்து திரும்பிச் சென்றனர். 

மேலும் இந்த இரயிலானது நெல்லைக்குச் சென்று அங்கிருந்து காலை 9.30 மணிக்கு மீண்டும் திருச்செந்தூருக்கு புறப்படுவதும் தடைபட்டதால், சென்னையிலிருந்து நெல்லைக்கு வரும் பயணிகள் திருச்செந்தூருக்கு வழக்கமாக இந்த இரயிலில் வருவதும் தடைபட்டது.

இதே போல் கடந்த 2008-ம் ஆண்டும் மர்மநபர்கள் ரயில் என்ஜின் கேபிள்களை அறுத்திருந்தனர். அச்சம்பவம் தொடர்பானவர்கள் இதுவரையும் கைது செய்யப்படாத வேளையில் மீண்டும் ஒரு நாசவேலை நடந்திருப்பது அனைவரையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது
Read More

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top