தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Wednesday, July 27, 2011

மீனவர்களை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!!!

 தூத்துக்குடியில் மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் நாளை உடனே தவறாமல் நடத்த வேண்டும் என கடலோர மக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.இது குறித்து கடலோர மக்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கோரிக்கை மனு விபரம்; 
புதிய அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகியும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாதந்தோறும் நடக்க வேண்டிய மீனவர் குறை தீர்க்கும் நாளை இது வரையிலும் நடத்தாமல் மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் வேண்டுமென்றே சாக்கு போக்கு சொல்லி திட்டமிட்டே தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் தொடர்ந்து மூன்று மாதங்களாக நடைபெற்று வருகிறது. அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் மாதம் தவறாமல் நடந்து வருகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமிட்டே கூட்டம் நடத்தப் படுவதில்லை.கடந்த 18.07.2011 அன்று திரேஸ்புரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களில் நான்கு மீனவர்கள், கடலில் ஏற்பட்ட சூறாவளிக் காற்றால் அவர்கள் சென்ற படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு இலட்சம் வழங்கப்பட்டது.ஆனால் கடந்த 23.07.2011 அன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மின் கசிவால் இறந்து போன மூன்று நோயாளிகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா இரண்டு இலட்சம் வழங்கப்பட்டது .இது தவிர நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்த செல்வராஜ் என்பவர் பணியின் காரணமாக சாலை விபத்தில் 02.07.2011 அன்று படுகாயம் அடைந்து, சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து கடந்த 24.07.2011 அன்று இரண்டு இலட்சம் வழங்கப் பட்டது .கடந்த இரு வாரங்களில் நடந்த இந்த மூன்று மரண நிகழ்வுகளிலும் கடலில் இறந்த நான்கு மீனவர்களின் உயிர் மட்டும் தமிழக அரசுக்கு அவ்வளவு மலிவாகப் போய்விட்டது. விபத்தில் இறந்த நோயாளிகளுக்கு இரண்டு இலட்சம் கொடுக்கும் அரசு,பணியில் இருந்த காவலருக்கு இரண்டு இலட்சம் கொடுக்கும் அரசு, நாட்டின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் மீனவனுக்கு, நாட்டிற்கு அந்நிய செலவாணியை பெற்றுத்தரும் மீனவனுக்கு, நாட்டின் கடல் எல்லையை காலங்காலமாக எந்த வித சம்பளமும் இன்றி பாதுகாத்து வரும் மீனவனுக்கு, அவர்கள் பணியில் இருக்கும் போது, இயற்கைப் பேரிடர் காரணமாக உயிர் இழந்த மீனவனுக்கு மட்டும் ஒரு இலட்சம்.தமிழகத்தின் தென் பகுதி கடலோர மாவட்டங்களைப் பார்வையிட வந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயபால் தூத்துக்குடி மாநகரத்திற்கு வந்தும் கூட இறந்து போன நான்கு மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வரவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலுவையும் சந்திக்க வரவில்லை. அவருக்கு எந்த நிவாரணமும் இல்லை .இறந்து போன சக மீனவர்களுக்கு இரங்கல் தெரிவிக்க, அவர்களின் உடல்களை தேட தொழில் மறியல் செய்த விசைப் படகு மீனவர்களை மீண்டும் கடலில் மீன் பிடிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்காமல், அவர்களின் உழைப்பை பறிக்கும் செயல் பாடுகளை வேடிக்கை பார்க்கும் மீன் வளத்துறை, மாவட்ட நிர்வாகம்,மற்றும் தூத்துக்குடி அமைச்சர்ககளை என்னவென்று சொல்லுவது? கடலில் மீனவர் காணாமல் போன மீனவர்களை தேட வேண்டியக் கடமை அரசை சார்ந்தது. ஆனால், இத்தகைய செலவுகளை மாவட்ட நிர்வாகமோ, மீன்வளத்துறையோ, கடலோரக் காவல் படையோ இது வரையிலும்  மேற்கொள்வதில்லை. மீனவர்களே , தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து இறந்து போகும் தங்கள் சக மீனவர்களைத் தேடிக் கொள்ளவேண்டும் என்பது தான் தலைவிதி! ஆகவே, இத்தகைய சூழலில் அரசு இயந்திரங்கள் தங்களின் பொறுப்புகளை தொடர்ந்து தட்டிக் கழித்தே வருகின்றன. குறைந்த பட்சம் காணாமல் போகும் மீனவர்களை தேடுகிற பொருட்செலவையாவது அரசு ஏற்றுக்கொள்ளலாமே?மேற்கண்ட மாபெரும் சிக்கல்களை, அநீதிகளை, குறைபாடுகளை எடுத்துச் , சொல்வதற்கு மீனவர்களுக்கு இருந்த ஒரே வடிகால் , இந்த மீனவர் குறை தீர்க்கும் நாள் தான் . எனவே மீனவர் குறை தீர்க்கும் நாளை மாதந்தோறும் உடனே தவறாமல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top