தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Tuesday, May 3, 2011

கடற்கொள்ளையர்களின் பிடியில் புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமி


சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில், கடந்த எட்டு மாதமாக சிக்கித் தவிக்கும், தூத்துக்குடி மாவட்ட கப்பல் மாலுமியை மீட்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த மீனவர் லிட்டன் மகன் டனிஸ்டன்(26), தனியார் கப்பலில் மாலுமியாக பணிபுரிகிறார். இந்த சரக்கு கப்பல் கடந்தாண்டு செப்.,28ம் தேதி, பிரான்சிலிருந்து வளைகுடா நாட்டிற்கு சென்ற போது, சோமாலிய கடற்பகுதியில், அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் இக்கப்பலை சிறைபிடித்து கடத்தினர். இதில் பணிபுரிந்த டனிஸ்டன் உள்ளிட்ட 15 மாலுமிகள், பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.
அக்கொள்ளையர்களுக்கும், கப்பல் கம்பெனிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், கடந்த மாதம் எட்டு மாலுமிகளையும், கப்பலையும் விடுதலை செய்தனர். ஆனால், டனிஸ்டன் உள்ளிட்ட ஏழு பேரை மட்டும் அவர்கள் விடுவிக்கவில்லை. இந்திய கடற்படையால் கைது செய்து வைக்கப்பட்டுள்ள சோமாலிய கடற்கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்டால் மட்டுமே, டனிஸ்டன் உள்ளிட்ட ஏழுபேரும் விடுவிக்கப்படுவர் என, அவர்கள் உறுதியாக கூறிவிட்டனர். கடந்த எட்டு மாதமாக அக்கொள்ளையர்களிடம் சிக்கித் தவிக்கும் டனிஸ்டனை மீட்க வலியுறுத்தி, அவர்களது குடும்பத்தினர் மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசனுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

கலெக்டரிடம் மனு: 
இந்நிலையில், புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் சங்க தலைவர் சேவியர் தலைமையில் டனிஸ்டன் தந்தை லிட்டன், குடும்பத்தினர், கிராம மக்கள் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கடற்கொள்ளையர்களிடமிருந்து, டனிஸ்டனை மீட்க உதவும்படி, கலெக்டர் மகேஸ்வரனிடம் மனு அளித்தனர்.

தந்தை லிட்டன் கூறும்போது,"" கடற்கொள்ளையர்கள் கொடுமைப்படுத்துவதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன், டனிஸ்டன் போனில் தெரிவித்தான். பின்னர், அவனிடமிருந்து போன் தொடர்பே இல்லை. இதனால் குடும்பத்தினர், ஊர்மக்கள் துன்பத்தில் வாடுகிறோம். எனவே, டனிஸ்டனை மீட்க மத்திய, தமிழக அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top